Tuesday, 22 November 2011

இயற்கை மருத்துவம்



நமது பழக்க வழக்கங்கள் காரணமாக நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த பிரச்சனைகளால் ஏற்படும் நோய்களை தீர்க்க நாம் மருத்துவரை நாடுகிறோம். அவர் மருந்து, மாத்திரை, ஊசி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நம்மை குணப்படுத்துகிறார்.

ஆனால், மருத்துவரின் துணையின்றி, இயற்கை தந்த வரங்களைக் கொண்டு, நமக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களை நாமே குணப்படுத்தி கொள்ள முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக உணவு உண்ணாமல் நாவின் சுவைக்காக உண்ணும்போது நோய் நம்மை பற்றிக் கொள்கிறது. அளவுக்கு மீறிய சுகானுபவங்கள், இன்ப சுகத்திற்காக நாம் கையாளும் தவறான வழிமுறைகள் பல நோய்களுக்கு காரணமாகின்றன.

இன்றைய நவீன நாகரிகம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி விட்டதால் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகிறோம். அதனாலும் பல நோய்களுக்கு ஆளாகி துன்பபடுகிறோம். இயற்கையோடு இயைந்து வாழ நாம் முற்படாததே இதற்கு காரணம். இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி?

நம் உடலில் நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமான கழிவுகளை-அதாவது தேங்கிய மலம், சளி, நச்சு நீர் போன்றவைகளை இயற்கை முறையில் நம் உடலில் இருந்து அகற்றினாலே நோய்கள் நம்மை அணுகாது.

இயற்கை மருத்துவம் மிகவும் சுலபமானது. பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ இல்லாதது. “இயற்கைதான் அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. மருத்துவர் அல்ல” என்கிறார் மருத்துவ தந்தை ஹிப்போகிரட்ஸ் இயற்கை மருத்துவம் ஒரு வாழ்;க்கை முறை சிகிச்சை முறை அல்ல என்கிறார் தேச பிதா, அண்ணல் மகாத்மா காந்தி.

என்ன அந்த இயற்கை வைத்தியம்?

இயற்கையில் கிடைக்கும் விதை, இலை, பூ, காய், கனி, பட்டை மற்றும் வேர் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை கொண்டு செய்யப்படும்

மருத்துவமே இயற்கை மருத்துவம் என்று பலர் நினைக்கிறார்கள். இக்கருத்து முற்றிலும் தவறு, இவை யாவும் துணை மருந்துகளே! மூல மருந்தும் முக்கிய மருந்தும் எதுவெனில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களே ஆகும். இவை மனிதர்களுக்கும் உலகத்திற்கும் மிகவும் அவசியமானவை.

அண்டம் என்பது ஆகாயம், பிண்டம் என்பது மானிட சரீரம் என்பது சித்தர் வாக்கு. அண்டத்தில் ஐந்து பூதங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு பூதம் இல்லை என்றால் உலகம் இல்லை. அது போல மானிட பிண்டத்தில் ஐம்பொறிகள் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவையே அவை. இவற்றில் ஒன்று இயங்காவிட்டாலும் மனிதம் முழு மனிதனாக கருதப்படுவதில்லை. ஊனமுற்றவன் என்றே அழைக்கப்படுகின்றான். 

ஐம்பொறிகளில் வரும் பின் விளைவு, பக்க விளைவுகள் மற்றும் மாற்றங்களை பஞ்ச பூதங்களைக் கொண்டு, மருந்தில்லா மருத்துவமாக சிகிச்சை செய்வதுதான் இயற்கை மருத்துவம்.

பொதுவாக இந்நாளில் நோய் என்று பல பெயர்களால் அழைக்கப்படுவது உண்மையில் நோயல்ல, நோயின் அறிகுறி, அல்லது உடலின் நிலையை காட்டும் புறக்காரணம். உடலுக்கு உள்ளேயோ அல்லது வேறு உறுப்புகளிலோ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம். எனவே காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, நீரழிவு, ரத்த அழுத்தம் முதலியவை இந்த இலக்கணப்படி நோய்களல்ல. இதயம், நுரையீரல், சிறுநீரகம் கணையம் ஆகிய முக்கிய உறுப்புகளிலோ, இரத்த ஓட்டத்திலோ நேர்ந்துள்ள மாற்றங்கள், தவறுகள், ஓழுங்கின்மை ஆகியவற்றை காட்டும் அறிகுறிகள்.

இயற்கை மருத்துவம் நோயின் மூலத்தை, நோய் முதல் நாடி அதை தீர்க்க முயல்கிறது. உடல் தானே தூய்மை அடைவதன் மூலமும் தன்னைத் தானே காத்துக் கொள்வதன் மூலமும் உடல்நிலை சீரடைய இயற்கை மருத்துவம் துணை செய்கிறது.

இந்த இரண்டின் விளைவாய் நோயுற்றோர் மீண்டும் பூரண நலம் பெறுகிறார்கள். உள்ளுறுப்புக்கள் மீண்டும் வலிமையுடன் செயலாற்றுகின்றன. நோய்க்கான காரணம் நீக்கப்படுகிறது. நோய் குறிகளும் மறைகின்றன.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் இயற்கை மருத்துவ பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் 

மருந்தில்லா மருத்துவத்தில் யோகாசனமும் இயற்கை மருத்துவமும் செயல்படும் நிலை உருவாக வேண்டும்.

மண் சிகிச்சையைப் பற்றி பார்ப்போம்

மண்ணை மடித்து கொடுத்தால் மண்ணை மண் என்று நினைப்பவர்களுக்கு மண்ணாகி விடும் மருந்து என்று நினைப்பவர்களுக்கு மருந்தாகி விடும் என்பது வழக்கு.

செம்மண், களிமண், புற்றுமண் மற்றும் பலவகை மண்களினால் பல வகையான நோய்கள் நலமாகின்றன. உதாரணமாக சிறு குழந்தைகளுக்கு அக்கி என்ற நோய் தோன்றினால் மண்பாண்டம் செய்பவர்களைச் தேடிச் சென்று செம்மண்ணை பூசி வந்தால் குணம் கிடைக்கின்றது.

மகாத்மா காந்தியடிகளும் களிமண்ணைக் கொண்டு பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இன்று நாகர்கோவில், சங்கரன்கோவில், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் பல புண்ணிய ஸ்தலங்களில் புற்று மண்ணை மருந்தாக பயன்படுத்துகின்றார்கள். இயற்கை மருத்துவத்தில் மண்ணைக் கொண்டு மண் குளியல், மண் பற்று போடுதல், மண் புதையல், மண்பட்டி போடுவதால் தோல் நோய்கள், நாள்பட்ட நோய்கள், விஷக்கடிகள், மலச்சிக்கல், உடலில் உண்டாகும் அதிக உஷ்ணம் மேலும் பலவகை காய்ச்சல்களும் முற்றிலும் குணமாகின்றன.

மண்ணின் தன்மையில் ஓரளவு விண், காற்று, நெருப்பு மற்றும் நீர் ஆகிய நான்கும் இணைந்து இருக்கின்றன. மண்ணுக்கு உறிஞ்சும் தன்மை இயல்பாக இருப்பதால் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் விஷங்கள் அனைத்தும் உறிஞ்சப்படுகின்றன.

நமது அன்றாட வாழ்க்கையில் அம்மி, ஆட்டுக்கல், மண்சட்டி ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கும் உணவு பொருட்கள் மிகவும் ருசியாகவும், உடலுக்கு மருந்தாகவும் மாறுகின்றன.

இப்பொழுது மண்குளியலின் பலன்களை தெரிந்து கொள்வோம்.

சிலருக்கு உடம்பு ழுழுவதும் சொறி சிரங்கு வருகிறது. கட்டிகள் ஓன்றாக வந்து கொண்டே இருக்கின்றன. பிராண சக்தி உடம்பில் உள்ள நச்சுப் பொருள்களையும் வேண்டாத அழுக்கையும், தோலின் வழியாக வெளியேற்ற முயலுவதன் அறிகுறியே இது. இதற்கு மண் குளியல் உதவியாக இருக்கும்.

உலர்ந்த வண்டல் மண்ணைக் கொண்;டு வந்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனைச் சுத்தமான தண்ணீரில் குழம்பாகக் கரைத்துக் கொண்டு உடம்பு ழுழுவதும் ப+ச வேண்டும். இது குறைந்தது கால் சென்டிமீட்;டர் கனமாவது இருப்பது நல்லது. அரை சென்டிமீட்டர் கூட இருக்கலாம். இப்படி மண்ணை அப்பிக் கொண்டு இளம் வெயிலில் அரை மணி  முதல் ஓன்றரை மணி நேரம் வரை இருக்க வேண்டும். அதன் பிறகு குளித்து மண்ணைக் கழுவிவிட வேண்டும். இப்படிச் செய்வது உடம்புக்கு இதமாக இருக்கும். தீவிர நோய்கள்,  மூன்று நான்கு தடவை இப்படிக் குளிப்பதனாலேயே குணமாகும். தீராத நோயாக இருந்தால் தொடர்ந்து பல நாட்கள் செய்ய வேண்டும். ஓரே நாளில் காலை, மாலை இரு தடவைகளும் மண் குளியல் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை விரைவில் வெளியேற்றும். நோயின் தன்மையை அனுசரித்து உணவிலும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் மண் குளியல் சிறந்த பயன் தரும்.

நீர் சிகிச்சையால் இயற்கை மருத்துவத்தில் பயன் அடைவதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

“தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே” என்ற பழமொழிக்கேற்றார் போல நீரின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம். நாம் சாதாரண குடிநீரை உபயோகிக்கும் பொழுது சாதாரண பலன் கிடைக்கின்றது. அதே குடிநீரில் சிறிது உப்பு கலந்து உபயோகிக்கும்பொழுது சிறந்த பலன் கிடைக்கின்றது.

வெளியூர் செல்லும் ஒருவர் நீர் ஒத்துக் கொள்ளாது என்று பயந்து கொண்டு அங்கு கிடைக்கும் நீரை குடித்து விட்டு குளிப்பதை தவிர்த்து விடுகிறார்.

நீர் குடிப்பதனால் நமக்கு கிடைக்கும் பலன் : தாகத்தை தணிக்கிறது. விக்கலை நிறுத்துகிறது. வறட்சியை போக்குகின்றனது. மிக முக்கியமாக உள்சூட்டை தணிக்கிறது.

அதுபோல உள்@ரில் இருந்து கொண்டு குளிக்கும் பொழுது முறையாக குளிப்பதில்லை. அவ்வாறு நாம் முறையாக குளிப்பதனால் நமக்கு கிடைக்கும் பலன். நமது உடலில் ஒட்டியிருக்கும் அழுக்கினையும், தூசியையும், கழுவுகின்றோம் மற்றும் வியர்வை நாற்றம், உடலில் ஏற்படும் நமைச்சல், எரிச்சல் ஊறுகின்றது போல நிலைமைக்கும் கூட குளிக்கின்றோம். மேலும்வெளி சூட்டை தணிப்பதற்கும் குளிர்ந்த நீரை பயன்படுத்துகின்றோம்.

இவ்வாறு நாம் எந்த நீரில் குளித்தாலும் உள் சூடு மற்றும் வெளி சூடு இரண்டையும் ஒரே நேரத்தில் குறைத்தால் தான் நீரினால் ஏற்படும் ஒவ்வாமை என்கிற அலர்ஜியை சரி செய்ய முடியும்.

அதாவது விவரம் தெரிந்தவர்கள் ஆற்றிலோ அல்லது குளங்களில் குளிக்கும் பொழுது நீரில் இறங்கிய உடன் தனது இரண்டு கைகளை நீரில் கழுவியவுடன் இரு உள்ளங்கைகள் கொள்ளும் அளவிற்கு நீரை அள்ளி பருகிய பிறகு தான், தண்ணீரில் மூழ்கி குளிக்க வேண்டும். இது போல் நாம் வீட்டிலும் மற்றும் செல்லும் இடங்களிலும் குளிக்க செல்லும் போது, அங்கு நமக்கு கிடைக்கும் கிணற்று நீர், போர் போட்டு எடுத்துள்ள நீர் மற்றும் நகரங்களிலும், நகராட்சிகளிலும் நமக்கு வினியோகம் செய்யும் குடிநீர் அல்லது குளோரின் கலந்து பக்குவப்படுத்திய நீரில் குளித்தாலும் அவசியம் அதே நீரை குடிக்கவும் வேண்டும்.

குளிக்கும் முன் குடிக்கும் போது நமக்கு நடுக்கம் உதறல் சிலிர்ப்பு முதலியவைகள் குறைகின்றன. குளித்துக் கொண்டிருக்கும் போது குடித்தாலும் தவறு இல்லை.  குளித்த உடன் நீர் அவசியம் குடிக்க வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் குழந்தையை குளிப்பாட்டும் போது குளிப்பாட்டிய உடன் டவலில் துடைக்கும் முன் சிறிது நீரை வாயில் ஊட்டியவுடன் டவலில் துடைப்பார்கள். எனவே சிறு வயதில் பெரியவர்களின் உதவியுடன் குளிக்கின்றோம். பெரியவர்கள் ஆனவுடன் அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த வெளிசூட்டையும், உள்சூட்டையும் ஒரே நேரத்தில், தணிக்கும் முறையை மறந்து செயல்படுவதினால் நீரினால் நமக்கு அலர்ஜி ஏற்படுகின்றது. மேலும் நாம் முறை தவறி குடிப்பதாலும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றோம்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலர் சளி தொல்லைகளினால் அவஸ்தைப்பட்டு முற்றிய நோயான ஆஸ்துமா, காசநோய், சைனஸ், ஈஸ்னோபிலியா போன்ற தீராத நோய்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் யோகாசன மருத்துவத்தில் வாமனதௌதி கிரியை என்று அழைக்கப்படும் கிரியை பயிற்சியையும் மற்றும் மூச்சுப் பயிற்சியினையும் (காற்று சிகிச்சையை) செய்து வரவேண்டும். தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை, மாறாக வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மற்றும் மூச்சு திணறிலினால் அவஸ்தைப்படும் பொழுதோ பயமின்றி தைரியமாக நீர் சிகிச்சை மற்றும் காற்று சிகிச்சை மேற்கொண்டு உடனடி நிவாரணம் பெறமுடியும். நோய் அதிகமாகாமல் தடுத்து, வந்துள்ள நோயை குறைத்து, நாளடைவில் பரிபூரண குணமடையவும் முடியும்.

தோல் நோய்கள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், கண்களில் ஏற்படும் புரை நோய்கள் நமது தொப்புள் பாகத்திற்கு மேல் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் குடிநீரைப் பயன்படுத்தி வாந்தி எடுப்பதன் மூலம் மிகுந்த பலன்கள் கிடைக்கின்றது.

அது போல நமது தொப்புள் பாகத்திற்கு கீழ் ஏற்படும் அனைத்து நோய்களும் நிறைய நீர் பயன்படுத்துவதால் நீங்குகின்றன. வாய் வழியாக சென்ற குடிநீர் உணவு பை, சிறுகுடல் வழியாக பெருங்குடலில் சென்று அங்கு இறுகிய கழிவுகளை நமது உடலையும், குடலையும் விட்டு இளகிய மலத்துடன் வெளியேற்றுகின்றது. இதனால் நாம் அருந்தும் உணவுகளில் இருக்கும் சத்துக்கள் உடலை தேற்றும் சக்தியையும் கொடுக்கும். பல நோய்கள் மற்றும் மூலம் பவுத்திர நோய்கள் நமக்கு என்றுமே வராது.

வெப்ப சிகிச்சையை பற்றி பார்ப்போம்

நமது உடலில் தொப்புளுக்கு அருகில் சோலார் பிளக்ஸ் என்று அழைக்கக் கூடிய மண்ணீரல் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த பகுதியை நாம் மறைத்து விடுவதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.

இப்பொழுது சூரிய சக்தியை பயன்படுத்தி சூரிய அடுப்பு, கை கடிகாரம், கால்குல்லேட்டர் மற்றும் அறிவியல் கருவிகள் செயல்படுகின்றன. அதுபோல நம்மை பாதுகாக்க, தொப்புளுக்கு அருகில் உள்ள மண்ணீரலுக்கு சூரிய சக்தியை செலுத்தவதால் வயிற்றுப் பகுதியில் இயங்கும் அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்கின்றன. 

அதிகாலை சூரிய உதயமும், மாலை சூரிய அஸ்தமனமும், ஆகும் நேரங்களில் வெளிப்படும் செங்கதிர்கள் மிகுந்த பலன் அளிக்கின்றன. பகலில் ஏற்படும் வெண்கதிர்களிலும் பலன் உண்டு. காலை நேரம் மிகவும் சிறந்தது. சூரிய நமஸ்காரம் என்கிற பயிற்சியை விவரம் தெரிந்தவர்கள் முதல் வெளிநாட்டினர் வரை குறைந்த ஆடையுடன் உடலில் சூரிய வெப்பம் படும்படி 12 நிலைகளில் பயிற்களை செய்கிறார்கள். இதனால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு ஆற்றல் அதிகரிக்கின்றது. செரிமானம் துரிதப்படுத்தப்படுகின்றது. மலச்சிக்கல் மறைகின்றது. குன்ம நோய்களும், பசியின்மையும் பறந்தோடுகின்றன. வயிற்றுக்குள் இருக்கும் அனைத்து உறுப்புகளும்  உறுதி அடைகின்றன. 

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஓட்டமும் இணைக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்காற்றால் நலம் பெறுகின்றது.

இதயத்தை முடுக்கி விட்டு இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலை நாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்த கொதிப்பை மட்டுப்படுத்தும், இதய துடிப்பை சமன் செய்யும்.

மாறி, மாறி மடக்கி நீட்டி நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றும் இல்லை. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து பகுதி முன்பின் வளைகின்றதால் தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைத்து எல்லா நாளமில்லா சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான செயல்களை செய்கின்றன.

தோல் பகுதிகள் புத்தணர்வு பெற்று பொலிவடைகின்றன. தசை பகுதிகள் அனைத்தும் வலுவடைகின்றன. மேலும் கொழுப்புகளினால் வயிற்று பகுதி, தொடை, இடுப்பு, கழுத்து நாடிகளில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.

சூரிய நமஸ்காரத்தால் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் எந்த விளையாட்டு பயிற்சிகளுக்கும், வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருந்து செயல்படலாம். இளமை, நலம், அழகு, மூன்றும் ஓருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தை கொடுக்கின்றது.

முதன் முதலில் பயிற்சிகளை செய்பவர்கள், பயிற்சி செய்தவர்கள் முன்னிலையிலோ அல்லது பயிற்சியாளரிடம் கற்றுக் கொண்ட பிறகு தனியாக தம் சொந்த இடங்களில் செய்து முழு பலன் அடையலாம்.

இயற்கை மருத்துவத்தில் காற்று சிகிச்சை முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

சாதாரண மூச்சு நுரையீரல் வரைக்கும் சென்று வரும். ஆழ்ந்த மூச்சு அடிவயிறு வரைக்கும் சென்று வரும். நமது உடலில் உள்ள சளியின் அளவைக் கண்டறிய நோயாளியை பரிசோதனை செய்யும் போது ஆழ்ந்த மூச்சு இழுத்து விடுமாறு கூறுவார்கள். இவ்வாறு, நோயைக் கண்டறிய ஆழ்ந்த மூச்சு தேவைப்படுகிறது. அந்த ஆழந்த மூச்சினை நோய்களை தீர்ப்பதற்கு இயற்கை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆழ்ந்து மூச்சு விடும் போது அடிவயிறு சுருங்குகின்றது. அதனால், உஷ்ண காற்றானது மேல் நோக்கி எழும்புகிறது வரும் வழியில் மார்பில் கட்டியுள்ள சளியையும் தலையில் தேங்கியிருக்கும் நீரையும், இளக்கி வெளியேறி விடுகின்றது.

ஈரப்பதத்தினால் உடல் பருத்து காணப்பட்டால் அதனை ஆழந்த மூச்சு பயிற்சி மற்றும் பிராணயாமம் மூலம் குறைக்க முடியும்.

காற்றை கட்டுப்படுத்தி தக்க நேரத்தில் உயிரைக் காக்கவும் மிகவும் பயன்படுவது பிராணயாமம் உதாரணமாக நீர்த்தேக்கங்களில் தவறி விழும் ஒருவர் தன்னைக் காப்பாற்ற மூச்சை அடக்கி தண்ணீருக்கு மேல் வருகின்றதை போல, சாதாரண நிலையில் இருக்கும் பொழுது உயிரை காக்கும் சக்தி இரட்டிப்பாக்கிறது. காற்றைக் கட்டுபடுத்த தெரியாதவர்களுக்கு தண்ணீரில் கண்டம் என்ற வாழ்க்கை அமைந்து விடுகிறது.

காற்றைப் பற்றி நம் முன்னோர்கள், சித்தர்கள், தௌ;ள தெளிவாக எடுத்து கூறியுள்ளனர். ஞானசாரம் நூல், திருமூலர் திருமந்திரம் முதலான சித்தர் பாடல்கள் யாவும் காற்றையே மருந்தாக்கி வாழ வலியுறுத்துகின்றன.

பிராணயாமத்தில் மூன்று நிலைகள் உண்டு அவை காற்றை இழுப்பது, நிறுத்தி வைப்பது மற்றும் வெளியிடுவது ஆகும். இவ்வாறு ஒரு பங்கு இழுத்து ஒரு பங்கு நிறுத்தி இரு மடங்கு காற்றை மெதுவாக வெளிவிட வேண்டும்.இப்படி ஒரு கால அளவில் கட்டுப்பாட்டுடன் நிகழ்வதையே பிராணயாமம் என்கிறோம். 

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர், திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

என்று திருமூலர் உடம்பையும் உயிரையும் வளர்க்கும் உபாயமாக உயிர்ப்பை (காற்றை) முன்னிறுத்துகின்றார். 
பத்மாசனத்தில் அமர்ந்து, வலது மூக்கால் மூச்சு வாங்கி நிறுத்தி, இடது மூக்கால் மெதுவாக விட்டு, மறுபடியும் இடது மூக்கால் வாங்கி நிறுத்தி, வலது மூக்கால் விடுவது ஒரு சுகப்பூர்வ பிராணாயாமம்.

இது நோய்களை நீக்கி உதவும், இதனால் நாடிகள் சுத்தம் அடைகின்றன. மனஒருமை ஏற்படும். பிரம்மச்சர்யம் காக்க இது உதவும்.

நாக்கு நுனி, மேல் அண்ணத்தைத் தொடும்படி மடித்துக் கொண்டு, காற்றை வாய்வழியாக இஸ்,ஸ்,ஸ் என்று சப்தத்துடன் உறிஞ்ச வேண்டும். மேல், கீழ், வரிசைப்பற்கள், ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருக்கலாம். உதடுகள் சற்று திறந்திருக்கவும் இப்படி உள்வாங்கும் காற்று நுரையீரல்களை முழுதும் நிரப்பியதும் சிறிது நேரம் உள்ளே நிறுத்தலாம். அதன் பின்னர் இரு மூக்கு துவாரங்களின் வழியே மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இப்படி வாய்வழி பூரகம் செய்து கும்பகத்தின் பின் இரு மூக்கு துவாரங்களின் வழி ரேசகம் செய்வதே சீத்காரி பிராணயாமம்.

இப்பயிற்சி உடலின் ஆற்றலையும், வசிகரத்தையும், அதிகரிக்கும். பசி, தாகம், சோம்பல், அதிக தூக்கம் முதலியன நீங்கும். பலன் பெருகி யோக சக்தி வளரும். இதனை நாள்தோறும், பலமுறை செய்வோர், அச்சம் தீர்ந்து, ஆளுமை பெருகி, நிகரற்ற நீடுவாழ்வார் என்று யோக நூல்கள் கூறுகின்றன.

இயற்கை மருத்துவத்தில் ஆகாய சிகிச்சை முறை பற்றி காண்போம்

மனிதர்களைச் சுற்றிலும் வெற்றிடம் இருப்பது போல் மானிட உடலுக்குள்ளும் வெற்றிடம் தேவை என்பதை சித்தர்கள் உண்ணா நோன்பு அல்லது விரதம் மூலமாக வாழ்ந்து காட்டியுள்ளனர். உண்ணா நோன்பு என்பது நடைமுறையில் 24 நான்கு மணி நேரத்தில் ஒரு வேளை அல்லது இரு வேளை உண்ணாமல் இருப்பதாகும்.

ஒருசில இடங்களில் காலை 6 மணிக்கு விரதம் துவங்கி மாலை 6 மணி வரை விரதம் கடைபிடிப்பவர்கள் கூட ஒன்று அல்லது இரண்டு வேளை உண்ணாமல் இருக்கிறார்கள்.

உண்ணா விரதத்தில் வறட்சி உபவாசம், நீர் உபவாசம், பழரச உபவாசம் என்று மூன்று வகைகள் உண்டு.

24 மணி நேரமும் நீர் கூட அருந்தாமல் இருப்பது வறட்சி உபவாசம், 24 மணி நேரத்திற்குள் இடை இடையே நீர் அருந்தினால் அது நீர் உபவாசம், வயது முதிர்ந்தவர்களும், நோயுற்றவர்களும், உடல் உறுதிக்காக பழரசங்களை அருந்தி கடைபிடிப்பது பழரச உபவாசம்.

இப்போது விரதம் கடைபிடிக்கும் முறைகள் என்னவென்று பார்ப்போம்.

விரத காலங்களில் கடினமான உடல் உழைப்பு கூடாது. அதனால் விரைவாக சக்தி இழப்பு ஏற்பட்டு சோர்வு அல்லது மயக்கம் வரக்கூடும். அவசியம் ஏற்படின், கடின உழைப்பு முடிந்தவுடன் கண்டிப்பாக படுக்கை நிலையில் ஒய்வு எடுத்துக் கொள்ளுவது அவசியம்.

அதாவது சாந்தி ஆசனம் என்றழைக்கபடும் யோக நிலையில் ஒய்வெடுத்துக் கொள்வதன் மூலம் சக்தி இழப்பு சமன் செய்யப்பட்டு மருத்துவ சக்தி அதிகரிக்கின்றது. விரத காலங்களில் பயணம் மேற்கொண்டால் பயணம் முடிந்தவுடன் ஒய்வு அவசியம்.

விரதம் முடிக்கும் முறை என்ன?

பொதுவாக விரதம் முடிக்கும் பொழுது பழரசம் அருந்தி விரதம் முடிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பழரசம் அருந்தியவுடன் சிறிது நேரத்தில் திட உணவை உட்கொள்ளக் கூடாது.

ஒரு பொழுது மட்டும் விரதம் இருப்வர்கள் மறு பொழுதில் திரவ உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். இரவு வேளையில் நாம் படுக்கைக்கு செல்வதால் திட உணவுகளில் முழுச் சாப்பாட்டை தவிர்த்து சிறிறுண்டி வகைகளை உட்கொள்ள வேண்டும். சிற்றுண்டி வகைகள் எளிதில் ஜீரணமாகி ஆழ்ந்த, கனவில்லாத உறக்கம் ஏற்படுத்தும்.  இவ்வாறு இந்த முறையில் ஒரு பொழுது விரதம் அனுசரிப்பவர்கள் கண்டிப்பாக திடஉணவுகளில் அரிசி சாப்பாடு வகைகளை தவிர்க்க வேண்டும். இந்த முறையில் ஒருபொழுது விரதம் அனுசரித்தால் மருத்துவ சக்தி அதிகமாக கிடைக்கும்.

ஒரு நாள் உண்ணா நோம்பு மேற்கொள்பவர்கள், விரதத்திற்கு முன் தினம் உப்பு, புளி காரத்தை நிறுத்தி திட உணவுகளில் சாப்பாடு வகைகளை தவிர்த்து காலை பொழுதில் சிற்றுண்டியும், உதாரணமாக புட்டு, இடியாப்பம், அவல் ஆகியவைகளும், மதிய உணவுக்கு பழ வகைகளும், அவல், தேங்காய்பால் போன்றவற்றையும், இரவில் திரவ உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

அடுத்தநாள் நாள் முழுவதும் உமிழ்நீரையும், காற்றையும் மட்டும் உட்கொள்ளலாம். விரதத்திற்கு மறுதினம் முழுவதும் திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். வயதானவர்கள் உடல் நலம் குன்றியவர்கள் பழ வகைகளை உட்கொள்ளலாம்.

நான்காவது தினத்தன்று தான் திட உணவுவகைகளை அதாவது அரிசி சாப்பாட்டினை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு, ஒரு பொழுது அனுசரிப்பவர்கள் ஒரு நாளும், ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பவர்கள் மூன்று நாட்களும், திட உணவுகளை அதாவது அரிசி சாப்பாடு வகைகளை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் லங்கனம் பரம ஓளஷதம் என்ற பழமொழிக்கேற்ப உண்ணாவிரத்தின் முழுப்பயன்களையும் பெறலாம்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் வயிறு சுத்தம் செய்யும் தௌதி கிரியா - பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்த கிரியை பயிற்சியை கண்டிப்பாக 7 வயத்திற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டும்.

பித்தம் வாந்தியில் ஒடுங்கும் என்று சித்தர்கள் கூறியபடி இந்த வைத்தியத்தில் பித்தம் பூரண குணமாகும்.

ஒரு முறை வாந்தி எடுப்பதால் நமது உடலில் உள்ள 40 விதமான பித்தங்கள் தணிகின்றன. மொத்தம் 80 விதமான பித்தங்கள் இருக்கின்றன. 40 விதமான பித்தத்தை வாந்தி எடுப்பதனால் குணமாக்க, மீதம் உள்ள 40 விதமான பித்தங்கள் பலம் இழந்த பித்தமாக நமது உடலில் இருக்கும். இத்துடன் நமது உடலில் இருந்து 14 விதமான வேகங்கள் தணிகின்றன.

“தாதற்ற சிறுநீரை தெளிய வைத்தால் உடலில் உள்ள வேகமெல்லாம் தணிந்து போகும்” என்பது சித்தர்களின் வாக்கு, ஒரு நாளைக்கு (ஒரு வேளைக்கு) 5 அல்லது 6 லிட்டர் வரை நமது உடலில் உஷ்ணம் பழைய கழிவுகள் குறைவாகவும், அதிகமாக இருப்பதை பொறுத்து குடிநீரை பருகி வந்தால் பித்தமும் மற்றும் 14 வேகங்களும் சமநிலை அடைந்து உடலின் பல்வேறு வகை நோய்களும் நீங்கி விடும்.

வாமன தெளிதி என்ற கிரியை பயிற்சி செய்யும் முறை அல்லது வாந்தி எடுக்கும் முறை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஐந்து அல்லது ஆறு டம்ளர் கொதித்த ஆறிய குடிநீரில் சமையல் உப்பை சிறிது கலந்து குடித்துவிட வேண்டும். குடித்தபின் நமது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், தானாக உடனடியாக வாந்தி மூலம் வெளியே வரும் மற்றும் பித்தம் குறைவாக இருந்தால் நமது விரல்களின் துணைக்கொண்டு நாக்கின் மேல்புறத்தில் வைத்து உள் நாக்கை தொடுவது போலவும் விடுவது போலவும் மெதுவாக அசைக்க வேண்டும். இவ்வாறு அசைக்கும் பொழுது குடித்த உப்பு நீரானது உணவு குழாயின் மேல் புறத்தன் மேலாக இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்து இரைப்பையில் உள்ள கழிவு பொருட்களையும், செரிக்காத உணவு பொருட்களையும் உடனடியாக வாந்தி மூலம் வெளியேற்றம்.

இவ்வாறு நாம் வாந்தி எடுக்கும் முன் நமது மூக்கானது தரையை பார்த்து இருக்கக் கூடாது. மாறாக நேராக நின்று கொண்டு முதுகை மட்டும் முன் பக்கமாக சற்று வளைத்து தலையை நிமிர்த்தி கண்களால் எதிரே இருக்கும் பொருட்களை பார்த்துக் கொண்டு நமது கைகளில் உள்ள இரண்டு அல்லது மூன்று விரல்களின் துணைக் கொண்டு நாக்கின் மேல் வைத்து உள் நாக்கை தொடுவது போலவும், விடுவது போலவும் மெதுவாக அசைக்க வேண்டும் அவ்வாறு அசைத்தும் வாந்தி வரவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் குடித்த உப்புநீர் மலக்குடல் வழியாக சென்று இறுகிய மலத்தை இளக வைத்து சுகபேதியை போல் எளிமையாக வலியின்றி, ஆபத்தன்றி நமது உடலை விட்டு வெளியேறிவிடும்.

இவ்வாறு இந்த வாந்தியம் என்கிற வைத்தியத்தை முறைப்படி செய்து வருபவர்களுக்கு “நரையும் திரையும் நாசமாக போய்விடும்” என்கிறார்கள் சித்தர்கள். நரை என்பது பித்தம் அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.

திரை என்பது நமது கண்களில் வளரக்கூடிய புரையை குறிக்கிறது. இவ்வாறு கண்களில் ஏற்படும் பல்வேறு வகை நோய்களும் கூட வாந்தியம் என்ற வைத்தியத்தால் மருந்து இல்லாமல் மாத்திரை இல்லாமல் ஊசி இல்லாமல் ஆப்ரேசன் இல்லாமல் குணமாகின்றன.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் குடல் சுத்தம் செய்யும் பஸ்தி கிரியா - பற்றி தெரிந்துகொள்வோம்.

இன்று நாம் நமது உடலை பாதுகாக்கவும், பராமரிக்கவும், பக்குவப்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், உடலுக்கு அடிப்படையாகவும் உள்ள மிக முக்கியமான உள் உறுப்பு, குடல்தான். இந்த குடலை சுத்தம் செய்யவும். குடல் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து நலமடையவும், பஸ்தி என்ற கிரியை அவசியமாகிறது. இதனை அஹிம்சை எனிமா என்றும் அழைக்கின்றோம். நமது ஆசனத் துவாரத்தின் வழியாக மலக்குடலை குளிர்ந்த நீரால் சுத்தம் செய்யும் முறைக்கு பஸ்திக்கிரியை என்று பெயர். ஆரோக்கியமான உடலில் இருந்து காலையும், மாலையும் நாள்தோறும் மலம் அவசியம் வெளியேற்றப்பட வேண்டும். இந்த கழிவுகள் சற்று இளகலாக வெளியேறாமல் இருந்து மறுநாள் வெளியேறும்போது மலம் கெட்டி பட்டு இருக்கும். இதனை மலச்சிக்கல் என்கிறோம்.

 இந்த மலச்சிக்கலை சரிசெய்வதற்கு அதிகாலையில் கழிவறைக்கு செல்லும் முன் இயல்பாக எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் காபி, டீ மற்றும் இதர பானங்களை அருந்தக் கூடாது. ஏனென்றால், இவை நமது நரம்பு மண்டலங்களை சுறுசுறுப்பு அடைய செய்வது போல் செய்து நரம்புகளை தளர்த்தி விடுகின்றன. அதற்கு

பதிலாக சாதாரண தண்ணீர் மட்டும் பெட் காபிக்கு பதிலாக பருகும்பொழுது முதலில் நமது உடல் குளிர்ச்சியடைந்து, பித்தம் தனிய வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது. பிறகு அந்த நீர் கீழ்நோக்கி சென்று வயிற்றை குளிர்ச்சி செய்து, சிறுகுடல் வழியாக சென்று பெருங்குடலை வந்தடைந்து அங்கு இறுகி இருக்கும் மலக் கழிவுகளை இளக்கி, மலம் நமது உடலை விட்டு எளிமையாக வெளியேற்றுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதனை சகஜ பஸ்திக் கிரியா என்று அழைக்கின்றோம். நமது குடலை சுத்தம் செய்வதற்கு இது ஒரு வழிமுறை.

 மற்றொரு முறைதான் அகிம்சை எனிமா. மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தயராகும் நோயாளிகளுக்கும், பிரசவத்தைச் சந்திக்கும் பெண்களுக்கும் குழந்தை பிறப்பதற்கு முன் எனிமா கொடுத்து விட்டுதான் சிகிச்சையை தொடங்குகிறார்கள். நம் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், குடலை சுத்தம் செய்து உடலை நோயிலிருந்து விடுதலையாக்கவும் மீண்டும் குடல் சம்பந்தமான நோய் வராமல் பாதுகாக்கவும், பராமரிக்கவும், பக்குவப்படுத்தவும் எனிமா மிகவும் முக்கியம். எனவே எனிமா எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கும் குடல்புண், குடல் வாதம், குடல் பிதுக்கம், குடல் வால் குடல் இறக்கம், மூலம், மற்றும் மூலபவுத்திரம் போன்ற நோய்கள் உருவாகாது என்று உறுதியாக சொல்கின்றோம்.

0 comments:

Post a Comment