Sunday, 5 June 2011

ORGAN ( BIOLOGICAL ) CLOCK

உடல் உள்உறுப்புகள் செயல்படும் நேரம் காட்டும் கடிகாரம்

நமது உடலில் உள்ள உள் உறுப்புகளின் இயக்கங்களை கீழ் வரும் நேரங்களில் நாம் பயன் படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
  அதிகாலை: 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம், போன்றவைகளை இந்நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து, 5 மணி வரை வெட்ட வெளியில் அமுதக் காற்று ( ஓசோன் ) ஒன்று வீசுகிறது. அந்தநேரத்தில் எழுந்து தியானம் செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியைப் பெறுகின்றோம். சான்றாக நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை, எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை. இதற்குக் காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றைச் சுவாசிப்பது தான். ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது. மூச்சு விட இயலாது சிரமப்படுவார்கள்.
காலை: 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்த நேரத்தில் எழுந்திருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்துக் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. “ விடியலில் எழுந்திருப்பவர், வாழ்க்கையில் தோற்றது இல்லை” என்பது மருத்துவப் பழமொழி. வாழ்வில் என்றும் அவர்களுக்கு வெற்றி தான் கிடைக்கும்.
  காலை: 7 மணி முதல் 9 மணி வரை வயிறு இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்தில் கண்டிப்பாகக் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
  காலை: 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரல் இயங்கிக் கொண்டிருப்பதால் மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும், மேலும் நாம் அந்நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவைவ் வயிற்றில் சீரணிக்க நெடு நேரம் எடுத்துக் கொள்கிறது. உணவு சீரணித்தல் மண்ணீரலின் பங்கு பற்றி நமக்கு தெரிந்ததே. உணவு சாப்பிட்டதும் ஏற்படவேண்டிய சுறுசுறுப்பிற்கும், புத்துணர்விற்கும் பதிலாக அசதியும், தூக்கமும் இந்தநேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும். நாளடைவில் பசி குறையும். காலையில் யோகாசனப் பயிற்சிகளை முடித்தப்பின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்தநேரத்தில் தோன்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு மண்ணீரல் செயல் இயக்கக் குறைவுதான் காரணம். நீரிழிவு நோயாளிகளுக்கும் தொந்தரவு அதிகரிக்கும் நேரம் இது. (படபடப்பு, மயக்கம், தூக்கக்கலக்கம் ஏற்படும் )
  நண்பகல்: 11 மணி முதல் 1 மணி வரை இதயம் இயங்கிக் கொண்டிருப்பதால் கடினமான வேலையேதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலைச் சாந்தபடுத்திக் கொள்ளலாம். நகரத்தில் உள்ள எல்லாத் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும் நேரம் இது. காரணம் இந்நேரத்தில் தான் இதய நோயளிகளுக்கும், சர்க்கரை நோயளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும். தூங்காமல் இருக்க வேண்டும். அப்படித் தூங்கினால் அபானவாயு பிராணவாயுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும். அல்லது முகவாதம் அல்லது மூட்டுவாதம், உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.
  பகல்: 1 மணி முதல் 3 மணி வரை சிறு குடல் இயங்கிக் கொண்டிருப்பதால் மதிய உணவு முடித்து 3:5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
பகல்: 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீர் பை இயங்கிக் கொண்டிருப்பதால் பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம் இது. முதுகுவலி, இடுப்பு வலி வரும் நேரம்இது.
மாலை: 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகம் இயங்கிக் கொண்டிருப்பதால் வழக்கமான வேலைகளில் இருந்து விடுப்பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல் பெயிலியர் முதல் நீர்க் கடுப்பு வரை ஏற்படும்.
இரவு: 7 மணி முதல் 9 மணி வரை இதய மேலுறை இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்திற்குள் கண்டிப்பாக இரவு உணவை முடித்திருக்க வேண்டும். மார்பு வலி, உடல் பாரம், படபடப்புத் தோன்றும்.
இரவு: 9 மணி முதல் 11 மணி வரை மூன்று வெப்ப மூட்டி இயங்கிக் கொண்டிருப்பதால் காலை முதல் மாலை வரை உழைத்து, களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டிய நேரம் இது, இந்நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருத்தலோ, படிப்பதோ கூடாது.
நடுநிசி: 11 மணி முதல் 1 மணி வரை பித்தப்பை இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்திற்குள் கண்டிப்பாகத் தூங்கி கொண்டிருக்க வேண்டும். இந்நேரத்தில் விழித்திருந்தால் அடுத்த நாள் உங்கள் முழுச் சக்தியையும் இழக்க நேரிடும்.
மிக அதிகாலை: 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரல் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்திற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாகக் கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும், உடல் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்.

1 comments:

Unknown said...

வாழ்க வளமுடன் நல்ல தகவல்கள்

Post a Comment